புனேவைச் சேர்ந்த தன்யா போடார் (Tanya Poddar) என்ற பெண், கடந்த ஜனவரி 2-ம் தேதி தனது அலுவலக வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஒரு மேம்பாலத்தைக் கடக்கும்போது, திடீரென அவரது கழுத்தில் ஏதோ ஒரு நூல் உரசிக் கொண்டே இறுக்கியுள்ளது. ஏதோ சாதாரண நூல் என்று நினைத்து அவர் அதை அகற்ற முயன்றபோதுதான், அது உயிரைப் பறிக்கும் ஆபத்தான ‘மாஞ்சா நூல்’ என்பது தெரியவந்தது.
கழுத்தில் மாட்டிய நூலை எடுக்க முயன்றபோது, அவரது விரல்களில் கடுமையான வெட்டுக்காயங்களும், உராய்வினால் தீக்காயங்களும் ஏற்பட்டன. ஒரு கட்டத்தில் கழுத்து ஆழமாக அறுக்கப்பட, “நான் உயிருக்காகப் போராடினேன்” என அவர் அந்த வீடியோவில் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
“சற்று ஆழமாக வெட்டியிருந்தால் எனது குரல்வளையே துண்டிக்கப்பட்டிருக்கும்” என அவர் நெஞ்சைப் பதற வைக்கும் அனுபவத்தைக் கூறியுள்ளார்.
மேம்பாலத்தின் மீது நின்று கொண்டு ஒரு நபர் பொறுப்பற்ற முறையில் பட்டம் விட்டதே இந்த விபத்திற்குக் காரணம். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றார்.
தற்போது மகர சங்கராந்தி பண்டிகை நெருங்கி வரும் வேளையில், விளையாட்டு என்ற பெயரில் பிறர் உயிரோடு விளையாடும் இந்த ‘மாஞ்சா’ கலாச்சாரத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என இணையவாசிகள் கொந்தளித்து வருகின்றனர்.
