ஆப்கானிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து நபர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் வெளியுறவுத்துறை அலுவலகத்தின் அருகில் கடந்த புதன்கிழமை அன்று குண்டுவெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 5 நபர்கள் உயிரிழந்தனர். இதற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். அது குறித்து நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

வெளியுறவு துறை அமைச்சகத்திலிருந்து முக்கியமான அதிகாரிகள் வெளியில் வந்த சமயத்தில் அலுவலகத்தின் வாயிலில் தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் மேற்கொண்டதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தாக்குதலில் பொதுமக்களில் ஐந்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 40-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. எனவே, உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று ஒரு அதிகாரி தெரிவித்திருக்கிறார்.