2023 ஐபிஎல் இறுதிப்போட்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மோதுகிறது..

 சென்னை அணி :

இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கிய சென்னை அணி, குஜராத் அணிக்கு எதிராக அதே அகமதாபாத்தில் நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்தது. ஆனால் அதன்பிறகு அணியை கேப்டன் தோனி தலைமையேற்று முதல் நபராக இறுதிப் போட்டிக்கு கொண்டு வந்துள்ளார். புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த போதிலும், தோனி தலைமையிலான அணி, முதல் தகுதிச் சுற்றில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தற்போது மீண்டும் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட காத்திருக்கின்றனர்.

குஜராத் அணி :

கடந்த சீசனைப் போலவே இந்த சீசனிலும் குஜராத் அணி ஆதிக்கம் செலுத்தியது. அதற்கு முக்கிய காரணம், அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஃபார்மிலும் நம்பிக்கையுடனும் இருப்பதுதான். அதுவே அவர்களை தனி நபர்களாகவும், குழுவாகவும் வெற்றியடையச் செய்கிறது. ஹர்திக் – நெஹ்ரா இருவரும் கச்சிதமாக திட்டமிடுகின்றனர்.. ஆனால், குவாலிபையர் 1ல் சென்னையிடம் தோல்வியடைந்த அந்த அணி, குவாலிபையர் 2ல் மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பரபரப்பான இறுதிக்கட்டம் :

இந்த முறை வெற்றி பெற்றால், அது சென்னையின் 5வது கோப்பையாகும். இதன் மூலம் அதிக கோப்பைகளை வென்ற மும்பை அணியை சமன் செய்யும் வாய்ப்பு சென்னைக்கு கிடைக்கும். கடந்த முறை சாம்பியனான குஜராத் அணி மீண்டும் வெற்றி பெற்றால், அது இரண்டாவது கோப்பையாகும். எனவே 2வது ஆண்டாக கோப்பையை வெல்ல மல்லுகட்டும்.. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.

நேரடி ஒளிபரப்பு :

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டி, ஜியோ சினிமா செயலியில் இலவசமாக, 4K தொழில்நுட்பத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும், அதே நேரத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் டிவி ஒளிபரப்பாகும். இருவரும் பல மொழிகளில் வர்ணனைகளைக் கொண்டுள்ளனர்.ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் மே 28ஆம் தேதி (இன்று) அகமதாபாத்தில் வானிலை தடையாக இருக்காது எனத் தெரிகிறது. 35 முதல் 40 டிகிரி வரை வெப்பம் இருக்கும் என்றும், அன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் வானிலை அறிக்கை கூறுகிறது. எனவே போட்டி முழுவதும் நடைபெறும் என்பதில் ரசிகர்கள் சந்தேகம் கொள்ள தேவையில்லை.