ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..  

அகமதாபாத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை-குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், வெற்றி பெறும் அணிக்கும், இறுதிப் போட்டியில் விளையாடும் அணிக்கும் எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்படும் என்பது தெரியவந்துள்ளது.

உலக அளவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் மிகவும் பிரபலமானது. 2008ல் தொடங்கிய ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ. 4.8 கோடியும், 2வது இடம் பிடித்த அணிக்கு ரூ.2.4 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

பின்னர் ஐபிஎல் தொடரின் வரவேற்பு பிசிசிஐக்கு வருமானத்தை தந்தது. இதன் விளைவாக, ஸ்பான்சர்கள் ஒளிபரப்பு உரிமம் வடிவில் வருமானத்தை கொட்டத் தொடங்கினர். இதன் மூலம் பிசிசிஐ உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக மாறியுள்ளது.கடந்த சீசனில் ஐபிஎல் தொடரை வென்றதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.20 கோடியும், இரண்டாமிடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.13 கோடியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான அணிகளுக்கு ரூ.46.5 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ வழங்கவுள்ளது. இந்த ஆண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20 கோடியும், ரன்னர் அப் அணிக்கு ரூ.12 கோடியும் பரிசாக வழங்கப்படும்.மேலும், 3வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், 4வது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர்ஜெயன்ட் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு ரூ.20 லட்சமும், மதிப்புமிக்க வீரர் விருதுக்கு ரூ.12 லட்சமும், சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதுக்கு ரூ.15 லட்சமும், கேம் சேஞ்சர் விருதுக்கு ரூ.12 லட்சமும் பிசிசிஐ வழங்கும்.