IPL கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொண்டது. அப்போது டாஸ் வென்ற மும்பை அணியானது பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்தது. டாப் ஆர்டர் வீரர்கள் 3 பேர் விரைவில் ஆட்டமிழந்த சூழலில், கேப்டன் குருணால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்கள் சேர்த்தார். எனினும் காயம் காரணமாக அவர் வெளியேறினார்.

மும்பை பந்துவீச்சை அடித்து நொறுக்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 47 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சர்கள் உடன் 89 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். அதன்பின் 178 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்கோடு மும்பை களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் ரோகித்சர்மா ஆடினர். இதில் இஷான்கிஷன் அரைசதத்தை அடித்து கடந்தார்.

மற்றொருபுறம் ரோகித்சர்மா 37 ரன்கள் குவித்த சூழலில், ரவி பிஷ்னோய் வீசிய பந்தில் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் போல்ட் ஆனார். நேஹால் வதேரா 16 ரன்களில் அவுட்டாகி வெளியேறியதை அடுத்து இறுதி ஓவர்களில் டிம் டேவிட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாசி 32 ரன்கள் குவித்தார். கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக லக்னோ அணியானது 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.