ஜப்பானைச் சேர்ந்த 56 வயது கோயிச்சி மட்சுபாரா என்ற கோடீஸ்வரர், ஆண்டுக்கு சுமார் 1.83 கோடி ரூபாய் மதிப்புள்ள வருமானத்தை முதலீடுகள் மற்றும் வாடகை மூலம் பெறுகிறார். இருப்பினும், அவர் டோக்கியோவில் ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் பகுதிநேர காவலாளியாக வேலை செய்கிறார்.

வாரத்தில் மூன்று நாட்கள், ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே பணிபுரிந்து, மாதம் ஒரு லட்சம் யென் (சுமார் 60,000 ரூபாய்) சம்பளம் பெறுகிறார். இது டோக்கியோவின் சராசரி மாத சம்பளமான 3.5 லட்சம் யென்னை விட மிகவும் குறைவு. ஆனாலும், இந்த வேலை அவருக்கு மனநிறைவையும், ஆரோக்கியமான வாழ்க்கையையும் தருவதாக அவர் கூறுகிறார்.

எளிமையான வாழ்க்கை முறையை விரும்பும் மட்சுபாரா, பணத்தை வீணாக்காமல், ஆடம்பரத்தைத் தவிர்த்து, கட்டிடத்தைப் பராமரித்து, மக்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி காண்கிறார்.

மட்சுபாராவின் வாழ்க்கைப் பயணம் மிகவும் ஊக்கமளிக்கிறது. பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஒரு தொழிற்சாலையில் மாதம் 1.8 லட்சம் யென் சம்பளத்தில் வேலை தொடங்கினார். குறைந்த வருமானத்தில் கூட செலவுகளைக் கட்டுப்படுத்தி, 30 லட்சம் யென் சேமித்து முதல் ஸ்டூடியோ குடியிருப்பை வாங்கினார்.

அந்த நேரத்தில் ஜப்பானின் வீட்டு வசதிச் சந்தை இப்போதையதை விட மலிவாக இருந்தது. படிப்படியாக மேலும் சொத்துக்களை வாங்கி, இன்று அவருக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ஆனாலும், அவர் காவலாளி வேலையைத் தேர்ந்தெடுத்தார். ஜப்பான் ஊடகங்கள் அவரை ‘இன்விசிபிள் மில்லியனர்’ என்று அழைக்கின்றன,

ஏனெனில் அவர் சாதாரண உடைகளில், எளிமையாக வாழ்ந்து, ஆடம்பரத்தைக் காட்டாமல், வேலை செய்வதில் மன அமைதியையும் உடல் ஊக்கத்தையும் பெறுகிறார். பணம் மட்டுமே வாழ்க்கையின் மகிழ்ச்சி இல்லை, எளிமையும் திருப்தியுமே உண்மையான அமைதியைத் தரும் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது.