
நாமக்கல் மாவட்டத்தில் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் சுற்றி திரிவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் வந்தவர்கள் வாகன சோதனை நடைபெறுவதை அறிந்ததும், தாங்கள் வந்த சாலையிலேயே திரும்பி சென்றனர்.
உடனடியாக காவல்துறையினர் காரை துரத்தி சென்று சோதனை செய்தனர். அதில் சிறிய கத்தி போன்ற ஆயுதங்கள் மற்றும் பட்டாக்கத்தி அவர்களிடம் இருந்தது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆயுதங்களை பறிமுதல் செய்து காரில் இருந்த 4 நபர்களையும் கைது செய்தனர். அவர்கள் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லோகேஸ்வரன்(32),அஜய் பிரபாகர்(26), குணசேகரன்(48), கிருபாகரன்(32) என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.
அந்த விசாரணையில் குணசேகரன் தனது மனைவியிடம் இருந்து குடும்ப தகராறு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மனைவியின் குடும்பத்தினருக்கும் அவருக்கும், ஏற்பட்ட சிறு மோதலின் காரணமாக ஆயுதங்களுடன் சுற்றித் திரிவது தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.