அயர்லாந்து அணிகளுக்கு  எதிரான டி20 போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வென்றது..

மகளிர் டி20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் இன்று 18-வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும்  களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தது. அதன்பின் ஷபாலி வர்மா 24 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து  கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் – ஸ்மிருதி ஜோடி சேர்ந்தனர்..

இதில் ஹர்மன்ப்ரீத் பொறுமையாக ஆட, ஸ்மிருதி மந்தானா சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். பின் 16வது ஓவரில் ஹர்மன்ப்ரீத் கவுர் 13 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ரிச்சா கோஷ் டக் அவுட் ஆனார். தொடர்ந்து  ஜெமிமா ரோட்ரிக்ஸ் களமிறங்க, மறுமுனையில் அரைசதம் கடந்து விளாசிய ஸ்மிருதி மந்தானா 19வது ஓவரில் அவுட் ஆனார். ஸ்மிருதி மந்தனா 56 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 87 ரன்கள் குவித்தார். பின் வந்த தீப்தி ஷர்மா டக் அவுட் ஆனார்.

இருப்பினும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 19 ரன்கள் சேர்த்து கடைசி ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆனார்.  இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக லாரா டெலானி 3 விக்கெட்டுகளும், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் 2 விக்கெட்டுகளும், அர்லீன் கெல்லி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணியின் துவக்க வீராங்கனைகளான ஆமி ஹண்டர் மற்றும் கேபி லூயிஸ் இருவரும் களமிறங்கினர். இதில் ஆமி ஹண்டர் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஒரு ரன் எடுத்த நிலையில், ஜெமிமா ரோட்ரிக்ஸ்  ரன் அவுட்செய்தார். தொடர்ந்து ரேணுகா சிங் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட்  டக் அவுட் ஆனார்.

அயர்லாந்து அணி 1 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது. பின் கேபி லூயிஸ் மற்றும்  லாரா டெலானி ஜோடி சேர்ந்து இருவரும் சிறப்பாக ஆடிவந்த நிலையில், அயர்லாந்து அணி 8.2 ஓவரில் 54 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஆட்டத்தில் மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேபி லூயிஸ் 32 ரன்களுடனும், லாரா டெலானி 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் மழை விடாத காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.