ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற நிலையில் போட்டியை ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் கண்டு களித்தனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில், தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட், கவாஜா ஆகியோர் களமிறங்கினர்.
இந்த ஜோடி பொறுமையாக ஆட்டத்தை தொடங்கிய நிலையில் டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகு லபுஸ்சேன் 3 ரன்களில் அவுட் ஆன நிலையில், அதன் பிறகு களம் இறங்கிய ஸ்மித் மற்றும் தொடக்க வீரரான கவாஜா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலியா அணி தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரரான உஸ்மான் கவாஜா 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் ஸ்மித் 38 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனையடுத்து மீண்டும் மேட்ச் தொடங்கிய நிலையில் ஸ்மித் நிதானமாக விளையாடி ஆட்டம் இழந்தார். இவருக்கு அடுத்து வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் முகமது ஷமியின் பந்துவீச்சில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து விளையாடிய கவாஜா-கிரீன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கவாஜா அரை சதம் அடித்தார். இந்நிலையில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்துள்ளது. உஸ்மான் கவாஜா 104 ரன்களிலும், கிரீன் 49 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். மேலும் இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டும், அஸ்வின் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.