இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில், அணு ஆயுத தகவல்களை பரிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அணுசக்தி நிலைகளுக்கும், வசதிகளுக்கும் எதிராக நடக்கும் தாக்குதல்களை தடுக்கும் ஒப்பந்தம் கடந்த 1988 ஆம் வருடத்தில் கையெழுத்தானது. அதன்படி, இரண்டு நாடுகளும் தங்களின் அணு ஆயுத நிலைகள் பற்றிய தகவல்களை ஒவ்வொரு வருடமும் பரிமாற வேண்டும்.

அந்த வகையில் கடந்த 1992 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் முதல் தேதியிலிருந்து ஒவ்வொரு வருடமும் இந்த பரிமாற்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு, இந்த வருடமும் நேற்று இரண்டு நாடுகளும் தங்கள் அணுசக்தி தொடர்பான தகவல்களை பரிமாறின.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமானது, டெல்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தில் இந்திய அணு ஆயுதம் தொடர்பான தகவல்களை அளித்தது. அதேபோன்று, இஸ்லாமாபாத்தில் இருக்கும் இந்திய தூதரகத்தில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தங்களின் அணு ஆயுத தகவல்களை அளித்தது.