மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் ஹார்முஸ் நீரிணைப் பாதை மூடப்பட்டுள்ள சூழலிலும் இந்தியாவின் எரிசக்தி விநியோகம் பாதுகாப்பாக உள்ளதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா தனது எண்ணெய் தேவையை 27 நாடுகளிலிருந்து நாற்பது நாடுகளாக விரிவுபடுத்தி மாற்று வழிகளை உறுதி செய்துள்ளது.
தேசிய நலனைக் கருத்தில் கொண்டு மிகவும் மலிவான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த விலையில் எண்ணெய் வழங்கும் எந்த ஒரு நாட்டிலிருந்தும் கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா எந்தவொரு வெளிநாட்டின் அனுமதியையும் எதிர்பார்க்கவில்லை என்பது மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ஆட்சேபனைகளை மீறி ரஷியாவிடமிருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. தற்போதைய சூழலில் ரஷியாவே இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் விநியோகஸ்தராக நீடிக்கிறது.
அமெரிக்கா வழங்கிய தற்காலிக விலக்கைத் தொடர்ந்து பிப்ரவரி 2026 வரையிலும் ரஷிய எண்ணெய் இறக்குமதியை இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டாலும் இந்தியாவின் சுத்திகரிப்புத் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா சுயசார்புடன் செயல்படுவதை இந்தத் தொடர் கொள்முதல் நடவடிக்கைகள் உறுதி செய்கின்றன.
