தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கரின் பெரிய சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார்.

2023  ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதியது. பாகிஸ்தானுக்கு எதிராக சாதனை வெற்றியைப் பதிவு செய்த பிறகு, இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த ரோஹித் சர்மா 22 ரன்கள் எடுத்து தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்தார். அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 10000 ரன்களை கடந்துள்ளார். இலங்கைக்கு எதிரான தனது 50வது போட்டியின் போது, ​​ரோஹித் சர்மாவும் ஒரு சிறப்பு கிளப்பில் நுழைந்துள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 22 ரன்கள் எடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறியடித்தார். எம்எஸ் தோனி 320 போட்டிகளில் 273 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை ஒரு நாள் போட்டிகளில் முடித்தார்.. மேலும் சச்சின் டெண்டுல்கர் ஒரு நாள் போட்டியில் 259 இன்னிங்ஸ்களில் 10000 ரன்களை எடுத்தார். ஆனால் ரோஹித் சர்மா 248 போட்டிகளில் 241 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். அதே நேரத்தில், 205 இன்னிங்ஸ்களில் இந்த எண்ணிக்கையைத் தொட்ட விராட் கோலி, அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்தவர்களில் முன்னணியில் உள்ளார்.

மேலும் 266 ஒருநாள் போட்டிகளில் 259 இன்னிங்ஸ்களில் 10 ஆயிரம் ரன்களை கடந்த சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயர் ஒருநாள் கிரிக்கெட்டின் மொத்த ஸ்கோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

இந்திய அணியின் 10 ஆயிரம் கிளப் (ODI) :

சச்சின் டெண்டுல்கர் – 18426

விராட் கோலி – 13027

சௌரவ் கங்குலி- 11363

ராகுல் டிராவிட்- 10768

எம்எஸ் தோனி- 10773

ரோஹித் சர்மா – 10031

ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் குவித்த கிளப்பில் நுழைந்தார். முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் 18426 ரன்களுடன் உள்ளார். 2வது இடத்தில் 13023 ரன்கள் குவித்துள்ள விராட் கோலி உள்ளார். மூன்றாவது இடத்தில் சவுரவ் கங்குலி, மொத்தம் 11,221 ரன்கள் குவித்துள்ளார். தோனி 10,599 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.

மிக வேகமாக 10000 ODI ரன்களை (இன்னிங்ஸ் மூலம்)

205 – விராட் கோலி

241 – ரோஹித் சர்மா

259 – சச்சின் டெண்டுல்கர்

263 – சௌரவ் கங்குலி

273 – தோனி

இறுதிப்போட்டியில் இந்திய அணி :

2023 ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா (48 பந்துகளில் 53 ரன்கள்) அரைசதமடித்த நிலையில், மேலும் கேஎல் ராகுல் 39 ரன்களும், இஷான் கிஷன் 33ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட் எடுத்து அசத்தினார். மேலும் அசலங்கா 4 விக்கெட்டுகளும், தீக்ஷனா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சுழற்பந்து வீச்சாளர்களிடம் 10 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது இந்திய அணி.

பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி 41.3 ஓவர்களில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை அணி பேட்டிங்கில்  அதிகபட்சமாக துனித் வெல்லலகே 42* ரன்களும், தனஞ்செய டி சில்வா 41 ரன்களும் எடுத்தனர். மேலும் அசலங்கா 22 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ்  9.3 ஓவரில் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஹர்திக் பாண்டியா 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன் மூலம் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.  முன்னதாக இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.