இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

2023 ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா (48 பந்துகளில் 53 ரன்கள்) அரைசதமடித்த நிலையில், மேலும் கேஎல் ராகுல் 39 ரன்களும், இஷான் கிஷன் 33ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலகே 5 விக்கெட் எடுத்து அசத்தினார். மேலும் அசலங்கா 4 விக்கெட்டுகளும், தீக்ஷனா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சுழற்பந்து வீச்சாளர்களிடம் 10 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது இந்திய அணி.

பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணி 41.3 ஓவர்களில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை அணி பேட்டிங்கில்  அதிகபட்சமாக துனித் வெல்லலகே 42* ரன்களும், தனஞ்செய டி சில்வா 41 ரன்களும் எடுத்தனர். மேலும் அசலங்கா 22 ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ்  9.3 ஓவரில் 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஹர்திக் பாண்டியா 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன் மூலம் சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.  முன்னதாக இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது. இதன் மூலம் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டி செப்டம்பர் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் எந்த அணி?

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதே சமயம், இப்போது 2வது அணிக்காக பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையே கடும் போட்டி நடக்கலாம். பாகிஸ்தானும் இலங்கையும் வியாழக்கிழமை (நாளை)நேருக்கு நேர் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய அணியுடன் மோதும். இதற்கிடையே இந்தியா – வங்கதேசம் இடையே போட்டி நடக்கிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் செப்டம்பர் 15-ம் தேதி மோதுகின்றன. ஆசிய கோப்பை சூப்பர்-4 சுற்றின் கடைசி போட்டி இதுவாகும். இந்த போட்டியில் வங்கதேசம் வென்றாலும் அந்த அணியால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாது. அதே நேரத்தில் வெற்றியுடன் வங்கதேசம் தொடரை முடிக்க நினைக்கும். இந்திய அணி க்ளீன் ஸ்வீப் செய்ய முயலும்..