இலங்கையைச் சேர்ந்த 20 வயது இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே வரலாறு படைத்துள்ளார்.

இலங்கைக்காக ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார். ஆசிய கோப்பை-2023-ன் ஒரு பகுதியாக நேற்று (செப்டம்பர் 12) கொழும்பு மைதானத்தில் இந்திய அணிக்கு எதிரான சூப்பர்-4 போட்டியில் துனித் வெல்லாலகே இந்த சாதனையை நிகழ்த்தினார். 20 ஆண்டுகள் 246 நாட்களில் இந்த சாதனையை துனித் எட்டினார்.. இதற்கு முன்பு சரித புத்திகா பெயரில் இந்த சாதனை இருந்தது.

2001ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 21 வயது 65 நாட்களில் புத்திகா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு முன், திசர பெரேரா (21 வயது 141 நாட்கள்) மற்றும் உவைஸ் கர்னைன் (21 வயது 233 நாட்கள்) ஆகியோர் இலங்கையின் இளம் வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள். இந்தப் போட்டியில் துனித் 10 ஓவர்களில் (ஒரு மெய்டன்) 40 ரன்கள் கொடுத்து 4 எக்கனாமியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் டாப் ஆர்டரை காலி செய்தார். அவரை எதிர்கொள்ள இந்திய அணியின் பிரபல பேட்ஸ்மேன்கள் கடுமையாக முயற்சித்தனர்.

துனித்தின் பந்துகளுக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் பதில் இல்லை. இளம்  வீரர் ஷுப்மான் கில், நட்சத்திர பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் மற்றும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் வெல்லாலகே மேஜிக்கில் விக்கெட்டுகளை விட்டனர். ரோஹித், கில், விராட், ராகுல், ஹர்திக் என பேட்டிங் ஜாம்பவான்களை மழுப்பலான பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்த வெல்லாலகே , தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பாராட்டு மழையில் மூழ்கி வருகிறார்.

மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் அசலங்கா (4 விக்கெட்டுகள்) மகிஷ் தீக்ஷனா ஒரு விக்கெட் எடுத்து வெல்லாலகேவுக்கு ஆதரவளிக்க, இந்தியா 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.  ரோகித் சர்மா (53), இஷான் கிஷன் (33), கேஎல் ராகுல் (39), ஷுப்மன் கில் (19), விராட் கோலி (3), ஹர்திக் (5), ஜடேஜா (4), பும்ரா (5), குல்தீப் (0) அக்சர் (26) ஆகிய 10 பேரும் அவுட்டாக்கினர். அவுட்டாகாமல் முகமது சிராஜ் (5) கிரீசில் இருந்தார். இதில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி மோசமான சாதனை படைத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்துவது இதுவே முதல்முறை.

2023 ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 49.1 ஓவரில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் ஆடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் வெறும் 172 ரன்களுக்கு சுருண்டது. இலங்கை அணி பேட்டிங்கில்  அதிகபட்சமாக துனித் வெல்லலகே 42* ரன்களும், தனஞ்செய டி சில்வா 41 ரன்களும் எடுத்தனர். மேலும் அசலங்கா 22 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். ஹர்திக் பாண்டியா 1 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.