இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது..

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (டிசம்பர் 17) நடைபெறுகிறது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாகவும், தென்னாப்பிரிக்க அணிக்கு எய்டன் மார்க்ரம் தலைமை தாங்கவும் உள்ளனர். முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

2023 உலகக் கோப்பை  இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு இந்திய அணி தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாட உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், டீம் இந்தியா புதிதாக தொடங்கும். இந்த ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் பங்கேற்கவில்லை என்பது வேறு விஷயம். இருப்பினும் கூட, 2025 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியைக் கருத்தில் கொண்டு, இந்தியா தனது புதிய வீரர்களை முயற்சிக்க ஒரு சிறந்த வாய்ப்பைப் பெறும்.

கே.எல்.ராகுலின் கேப்டன்ஷிப்தான் மிகப்பெரிய சோதனை. அவர் ஏற்கனவே இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார், ஆனால் இந்த தொடரில் அவர் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் அவருக்கு ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம். முதல் ஒருநாள் போட்டியில், கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் மீது  ரசிகர்களின் பார்வை இருக்கும்.

ரிங்கு சிங் ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் :

கேஎல் ராகுல்தலைமையில், ரிசர்வ் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பிடித்துள்ளார். இந்த ஆண்டு சஞ்சுவுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ஆனால் இந்த போட்டியில் சஞ்சுவுக்கு தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிங்கு சிங்கை 50 ஓவர் வடிவத்திலும் முயற்சி செய்ய அணி நிர்வாகம் விரும்புகிறது, எனவே இந்த இடது கை பேட்ஸ்மேனுக்கு இன்று ஒருநாள் போட்டியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கலாம். ரஜத் படிதார், சாய் சுதர்ஷன், திலக் வர்மா ஆகியோரும் ஒருநாள் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும் தென்னாப்பிரிக்கா அணியில் ககிசோ ரபாடா, என்ரிக் நோர்கியா இல்லாததால் பலவீனமாக காணப்படும் நிலையில் பந்துவீச்சை எதிர்த்து இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என இந்திய அணி நிர்வாகம் நம்புகிறது. அதேபோல ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்தியா இந்த ஒருநாள் தொடரில் நுழைகிறது. இத்தகைய சூழ்நிலையில், வேகப்பந்து வீச்சு பிரிவில் ஆவேஷ் கான், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு பெரிய பொறுப்பு இருக்கும்.

3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குமா இந்திய அணி?

மூன்றாவது டி20 போட்டியின் போது ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதே நிலை நீடித்தால் குல்தீப் யாதவ், அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா நுழைய முடியும். டாப் ஆர்டரில் பேட்ஸ்மேனாக ஆடக்கூடிய வாஷிங்டன் சுந்தருக்கும் இந்திய அணி வாய்ப்பளிக்கலாம். சாஹலுக்கு வாய்ப்பு கிடைத்தால், தேர்வாளர்களை கவர முயற்சிப்பார்.

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சாத்தியமான லெவன் :

ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, கேஎல் ராகுல் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், அக்சர் படேல் , குல்தீப் யாதவ், முகேஷ் குமார், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங்.

முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் சாத்தியமான லெவன் :

ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஜோர்ஜி, ரஸ்ஸி வான் டெர் டுசென், எய்டன் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், அண்டில் பெஹ்லுக்வாயோ, கேசவ் மகராஜ், தப்ரைஸ் ஷம்சி, நந்த்ரே பெர்கர், லிசாட் வில்லியம்ஸ்.