இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்ய குமார் யாதவ் உடைந்த இதய எமோஜியை இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்தது விவாதத்தை கிளப்பியுள்ளது..

இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்ய குமார் யாதவ் மனம் உடைந்துள்ளார். ஆனால் இது எதற்காக என்று தெரியவில்லை. ஏனென்றால், அதுகுறித்த யூகங்கள் மட்டுமே தற்போது வெளியாகி வருகின்றன. சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் ட்விட்டரில் உடைந்த இதய எமோஜியைப் பகிர்ந்துள்ளார். ஆனால், இந்தப் பதிவுகளில் ‘உடைந்த இதயத்துடன்’ சூர்யா எதையும் எழுதவில்லை. இதன் காரணமாக துல்லியமான மதிப்பீடு செய்ய முடியாது. ஆனால் ரசிகர்கள் இதுதான் காரணம் என யூகித்து கூறி வருகின்றனர்.

 ரசிகர்களின் யூகங்கள் :

ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ரசிகர்கள் தற்போது இதைப் பற்றி யூகிக்கிறார்கள். மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் நீக்கப்பட்டதால் சூர்யா இதைச் செய்துள்ளார் என்று அவர்கள் நம்புகின்றனர்.

டிசம்பர் 15, வெள்ளிக்கிழமை, மும்பை இந்தியன்ஸ் 2024 ஐபிஎல்லுக்கான அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது. 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த முறை ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் கேப்டனாக இருப்பார் என்று அறிவித்தது. முந்தைய 2 சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை 2024 ஐபிஎல் ஏலத்திற்கு முன் ட்ரேடிங் முறையில் மும்பை அணி வாங்கியது.

ரோஹித் கேப்டன் பதவியை இழந்தபோது மனம் உடைந்ததா?

2013ல் மும்பை அணி ரோஹித்தை முதல்முறையாக கேப்டனாக்கியது. அப்போது அந்த அணியிடம் ஒரு ஐபிஎல் கோப்பை கூட இல்லை, ஆனால் தற்போது அந்த அணி 5 முறை சாம்பியனாக உள்ளது. ரோஹித் சர்மா  கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் சிலரும் ரோஹித்தை நீக்கியதால் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. சூர்யகுமாரின் உடைந்த இதயம் இதற்கு ஒரு உதாரணமாகவே பார்க்கப்படுகிறது.. முன்னாள் மும்பை அணி வீரர் தவல்குல்கர்னியும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 45 என்ற ரோஹித்தின் ஜெர்சி எண்ணை வைத்திருந்தார். 

 ரோஹித்தின் தலைமையால் சூர்யகுமார் யாதவ் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 2023 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த பிறகு, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பற்றி சூர்யா, உலகக் கோப்பையில் ரோஹித் என்ன செய்தார் என்பது எதிர்காலத்தில் முன்மாதிரியாக இருக்கும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.