இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது. இரு அணிகள் மோதும் அடுத்த போட்டி ராஞ்சியில் பிப்ரவரி 23ம் தேதி தொடங்குகிறது. ஆனால், இந்த போட்டிக்கு முன்னதாகவே இந்திய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு இங்கிலாந்துக்கு எதிரான ராஞ்சி டெஸ்ட் போட்டியில்   ஓய்வு அளிக்கப்படலாம். Cricbuzz இன் அறிக்கையின்படி, இந்திய அணியின் வீரர்கள் செவ்வாய்கிழமை (பிப்ரவரி 20) ராஜ்கோட்டில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தில் ஏறுவார்கள். ஆனால் பும்ரா அணியுடன் பயணிக்க வாய்ப்பில்லை, மேலும் ராஜ்கோட்டில் இருந்து அகமதாபாத் திரும்புவார்.

ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கும் முடிவு இந்திய அணியின் பணிச்சுமை நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும். நடப்பு டெஸ்ட் தொடரில் அதிகபட்சமாக 17 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பும்ரா. இதில் பும்ரா 80.5 ஓவர்கள் வீசியதே பெரிய விஷயம், அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்க அணி நிர்வாகம் விரும்புகிறது. விசாகப்பட்டினம் டெஸ்டில் முகமது சிராஜுக்கும் இதே முறையில் ஓய்வு அளிக்கப்பட்டது. பும்ரா ஓய்வு எடுக்கும் பட்சத்தில் அவருக்குப் பதிலாக எந்த வீரரும் அணியில் இடம் பெறுவார்களா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தரம்ஷாலாவில் நடைபெறவுள்ள தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது பின்னர் முடிவு செய்யப்படும். இது பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் ராஞ்சி டெஸ்ட் முடிவைப் பொறுத்தது. வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார், ஆனால் அவர் ரஞ்சி விளையாடுவதற்காக ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது முகேஷ் ராஞ்சியில் மீண்டும் அணியில் இணைவார் என கூறப்படுகிறது.

இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை :

1வது டெஸ்ட்: ஜனவரி 25-29, ஹைதராபாத் (இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)

2வது டெஸ்ட்: 2-6 பிப்ரவரி, விசாகப்பட்டினம் (106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி)

3வது டெஸ்ட்: 15-19 பிப்ரவரி, ராஜ்கோட் (இந்தியா 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)

4வது டெஸ்ட்: 23-27 பிப்ரவரி, ராஞ்சி

5வது டெஸ்ட்: மார்ச் 7-11, தர்மஷாலா