ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சூர்யகுமார் யாதவ்..

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நேற்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி எடுத்த மிகப்பெரிய ஸ்கோர் இதுவாகும்.

இந்தப் போட்டியில் சுப்மன் கில் (104), ஷ்ரேயாஸ் ஐயர் (105) ஆகியோரின் சதத்தின் அடிப்படையில் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. இதனையடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 52 ரன்களும், இஷான் கிஷான் 31 ரன்களும் எடுத்தனர். பின்னர் இறுதியில் சூர்யா 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 399 ரன்களுக்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி களமிறங்கி இலக்கை துரத்தியபோது மழை வந்ததால் போட்டி நிறுத்தப்பட்டு பின், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ஓவருக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.. ஆனால் ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக சீன் அபோட் 54 ரன்களும், டேவிட் வார்னர் 53 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

கோலியின் சாதனை முறியடிப்பு :

இந்த  போட்டியில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சாளர்களைவெளுத்து வாங்கினார் சூர்யகுமார் யாதவ். கேமரூன் கிரீன் சூர்யாவை மறக்க மாட்டார். ஏனெனில் ஒரே ஓவரில் கிரீன் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் அடுத்தடுத்து 4 சிக்சர்களை அடித்தார். 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு இருந்தது. ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. ஆனால் இந்த 4 சிக்ஸர்களின் உதவியுடன் வெறும் 24 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார் சூர்யா. இதன் மூலம்  டீம் இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலியின் சாதனையை சூர்யா முறியடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சூர்யா 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரைப் பதிவு செய்தார். அதேபோல ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணியின் வேகமான பேட்ஸ்மேன் ஆனார் சூர்யா. இதன் மூலம் விராட்டை மிஞ்சினார் சூர்யா. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விராட் 27 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார். ஆனால் தற்போது சூர்யா 24 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்து சாதனை படைத்தார். அதேபோல மார்ச் 2021 இல் இங்கிலாந்துக்கு எதிராக க்ருனால் பாண்டியா 26 பந்துகளில் அரைசதம் அடித்த நிலையில், அதையும் முறியடித்தார்.

சூர்யகுமார் 6வது இந்திய வீரரானார் :

இந்திய அணியில் அதிவேகமாக அரைசதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். இந்திய அணிக்காக அதிவேக அரைசதம் அடித்தவர் என்ற சாதனையை முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய தேர்வுக் குழுத் தலைவருமான அஜித் அகர்கர் வைத்துள்ளார். அகர்கர் 2000 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 21 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணியில் கபில்தேவ், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ராகுல் டிராவிட் ஆகியோர் 22 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.

சூர்யகுமார் யாதவின் ODI வாழ்க்கை :

இதற்கிடையில், சூர்யகுமார் யாதவ் இதுவரை மொத்தம் 29 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இதில் சூர்யா 4 அரைசதங்களுடன் 659 ரன்கள் குவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் அதிவேக அரைசதம் :

சூர்யகுமார் யாதவ் – 24 பந்துகள்

விராட் கோலி – 27 பந்துகள்

விராட் கோலி – 31 பந்துகள்

ஹர்திக் பாண்டியா – 31 பந்துகள்

இந்தியாவுக்காக ஒருநாள் போட்டியில் அதிவேக அரைசதம்:

அஜித் அகர்கர் – 21 பந்துகள்

கபில்தேவ் – 22 பந்துகள்

ராகுல் டிராவிட் – 22 பந்துகள்

வீரேந்திர சேவாக் – 22 பந்துகள்

யுவராஜ் சிங் – 22 பந்துகள்

சூர்யகுமார் யாதவ் – 24 பந்துகள்

க்ருனால் பாண்டியா – 26 பந்துகள்