நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நட்டார்மங்கலம் கிராமத்தில் பழமையான பெரியகுளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் கோடை காலங்களில் இந்த குளம் முக்கிய நீர்நிலை ஆதாரமாகவும் விளங்குகிறது. தற்போது இந்த குளத்தில் உள்ள படித்துறைகள் மூன்று படிக்கட்டுகள் இடிந்து குளத்திற்குள் விழும் நிலையில் இருக்கிறது. இந்த குளத்தின் அருகே கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அமைந்திருப்பதால் அங்கு வருபவர்கள் குளத்திற்கு செல்லும் போது உயிர் சேதம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. சாலையோரம் உள்ள தடுப்பு சுவர்கள் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது.

இதனால் இரவு நேரங்களில் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கள் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும்  எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பெரிய குளத்தில் இடிந்துள்ள படித்துறையை  சீரமைத்து தடுப்பு சுவர் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.