கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டனூர் கிராமத்தில் இருக்கும் கோவில் நிலத்தில் அரசு அருங்காட்சியகம் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர் இணைந்து வரலாற்று குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமையில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 650 ஆண்டுகள் பழமையான கல்வெட்டை கண்டுபிடித்தனர். இதுகுறித்து மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது, பழமையான இந்த கல்வெட்டை அந்த கிராமத்து மக்கள் மெட்டுக்கால் அப்பபெருமாள் என வழிபட்டு வருகின்றனர்.

அந்த கல்வெட்டில் பெரிய சக்கரமும், இரண்டு பக்கங்களில் சூரியனும், சந்திரனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சக்கரத்தின் அருகே சங்கும், குத்துவிளக்கும் இருக்கிறது. இந்த கல்வெட்டு விஜயநகர மன்னர் வீர கம்பன உடையார் காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம். மேலும் கல்வெட்டு அஸ்தககிரியில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட தானத்தை பற்றி கூறுகிறது என தெரிவித்துள்ளார்.