தமிழக பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இவரை தொடர்ந்து மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி ஆகியோரும் தமிழக பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்கள் மூவரும் அண்ணாமலையின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து விட்டு சென்றுள்ளதால் தற்போது அண்ணாமலைக்கு கடுமையான டென்ஷன் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பாஜகவில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணைந்து இருந்தால் கூட அரசியல் சதி என்று கூறிவிடலாம். ஆனால் அவர்கள் கூட்டணி கட்சியான அதிமுகவில் இணைந்துள்ளதால் தற்போது மேல் இடத்திற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அண்ணாமலை திணறி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தது குறித்து பேசியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நான் இங்கு தோசை இட்லி சுட வரவில்லை. நான் கலைஞர் மற்றும் ஜெயலலிதா போன்று ஒரு தலைவன். ஒரு தலைவன் எடுக்கிற முடிவுகளால் கட்சியில் இருந்து சிலர் கோபித்துக் கொண்டு வெளியே செல்வது இயல்புதான். கட்சியை விட்டு நான்கு பேர் விலகி சென்று விட்டதால் என்னுடைய வேகம் குறைந்து விடாது. இனி தான் என்னுடைய வேகம் அதிகரிக்கும். என்னை திட்டி விட்டு கட்சியிலிருந்து விலகுபவர்கள் பொது சேவையோ அல்லது விவசாயமோ செய்யப்போவது கிடையாது. அவர்கள் வேறொரு கட்சியில் இணைந்து இன்னொரு கட்சித் தலைவரை வாழ்க என்று கூறி கோஷம் எழுப்ப போகிறார்கள் என்று கூறினார்.

அதன் பிறகு ஆங்கில ஊடகத்திற்கு அண்ணாமலை அளித்த பேட்டியில் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது, பாஜகவின் நிர்வாகிகளை கூட்டணி கட்சியான அதிமுக வேட்டையாடுகிறது. ஒரு முன்னாள் முதல்வராக இருப்பவர் பாஜகவின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை மற்றும் ஐந்தாம் நிலை செயல்பாட்டாளர்களை கூட வரவேற்க தயாராக இருக்கிறார் என்றால் அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இது தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளதை தான் காண்பிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியை போன்று நானும் அதிமுக முக்கிய புள்ளிகளை இணைக்க விரும்பி விட்டால் என்னுடைய லிஸ்ட் பெரிதாக இருக்கும். மேலும் அதற்கான இடத்தையும் நேரத்தையும் நான் தேர்வு செய்து முடிவு செய்வேன் என்று கூறியுள்ளார்.