இலங்கை திரிகோணமலையில் இருந்து ‘எம்.வி.லே.சாம்ப்லேய்ன்’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் சென்னை துறைமுகத்தை நேற்று முன்தினம் வந்தடைந்தது. இதில் 108 பயணிகள் மற்றும் 118 குழுவினர் பயணம் செய்துள்ளனர். இது கொரோனா பரவலுக்கு பிறகு சென்னை துறைமுகத்தை வந்தடையும் முதல் சர்வதேச பயணிகள் கப்பல் ஆகும். இதனையடுத்து கப்பலில் வந்த பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள சாந்தோம் தேவாலயம், புனித ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகம் மற்றும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உட்பட பல இடங்களையும் பார்த்து மகிழ்ந்தனர்.

இதனையடுத்து  சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட சொகுசு கப்பல் நேற்று சென்னை துறைமுகத்திலிருந்து அதன் தாயகமான இலங்கைக்கு திரும்பியது. இது குறித்து சென்னை துறைமுகம் ஆணைய தலைவர் சுனில் பாலிவால் கூறியுள்ளதாவது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சென்னை துறைமுகம், இந்தியாவிலுள்ள சர்வதேச கப்பல் சுற்றுலாவை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகுக்கிறது.  மத்திய, மாநில அரசுகள் இவற்றின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.