
உலக அளவில் பல்வேறு நாடுகளில் மக்கள் தொகை குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக ரஷ்யா, ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியிலும் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்த நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் அந்த நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு 30 வயது வரை வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இதே போன்று 2 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அதோடு இளம்பெற்றோருக்கு உதவுவதற்காக வட்டியில்லா கடன், 3 குழந்தைகள் பிறந்த பிறகு கடன் ரத்து செய்யப்படும் போன்ற பல அறிவிப்புகளையும் ஹங்கேரி அரசு வெளியிட்டிருக்கிறது. மேலும் இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெரும் தாய்மார்களுக்கு வருமான வரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் விலக்கு அளிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்ட திட்டம் தான் தற்போது விரிவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.