மும்பை லோகமான்ய திலக் முனையத்தில் (LTT) ஓடும் ரயிலில் ஏற முயன்று, பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையேயான இடைவெளியில் சிக்கிய இளைஞரை ஆர்பிஎஃப் (RPF) வீரர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரைச் சேர்ந்த 22 வயதான குந்தன் குமார் என்ற இளைஞர், தர்பங்கா செல்ல ரக்சால் எக்ஸ்பிரஸ் (Raxaul Express) ரயிலில் ஏற முயன்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.பி. வஞ்சாரி மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் சச்சின் சப்னே ஆகியோர், நொடிப் பொழுதில் பாய்ந்து சென்று அந்த இளைஞரை இழுத்து உயிரைக் காப்பாற்றினர்.

“ஆபரேஷன் யாத்ரி சுரக்ஷா” திட்டத்தின் கீழ் வீரர்களின் இந்த துரித நடவடிக்கை அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதிர்ஷ்டவசமாகப் பெரிய காயங்கள் இன்றி தப்பிய அந்த இளைஞர், முதலுதவிக்குப் பிறகு தனது பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டார். தன்னுயிரைக் காத்த வீரர்களுக்கு அவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.