செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி,  நாங்கள் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டோம் என்று தீர்மானத்தை கொண்டு வந்து,  அதை நிறைவேற்றி இருக்கிறோம். இனி எந்த சூழ்நிலையிலும்.. பாரதிய ஜனதா கட்சியோடு,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக கூட்டணி இருக்காது. நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல…  வருகின்ற 2026இல் நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலிலும்,  உறுதியாக கூட்டணி இருக்காது என்பதை நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல,  வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் கூட நிச்சயமாக இவர்களோடு கூட்டணி இருக்காது. இரண்டு தேர்தல்களிலும் எங்களுடைய கழகத்தின் பொதுச்செயலாளர்,  போற்றுதலுக்குரிய எடப்பாடி உடைய தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு,  தேர்தலை சந்திப்போம். தமிழக மக்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள். எங்களுக்கு பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்வார்கள்.

வெற்றி பெற செய்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது,  தமிழ் மக்களுடைய உரிமைகளையும்,  தமிழ் மக்களுடைய நலனிலும் குரல் கொடுத்து கொண்டிருப்போம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு ஒரே உதாரணம் கடந்த 2014இல் கிட்டத்தட்ட 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். காவிரி நதி நீர் பிரச்சினை வந்தபோது நாடாளுமன்றத்தில்,  22 நாட்கள் நாடாளுமன்றமே செயல்படாத அளவிற்கு தமிழ்நாட்டினுடைய ஜீவாதார உரிமையை மீட்டெடுப்பதற்காக அன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்தார்கள் என்பதை இப்போது நினைவு கூற விரும்புகின்றேன் என தெரிவித்தார்.