இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீரின் செயல்பாடுகள் குறித்து அண்மைக்காலமாகப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சில முன்னாள் வீரர்கள் அவரைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் படேல், கம்பீருக்கு ஆதரவாக மிகக் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். கம்பீரின் தனித்துவமான குணம் குறித்துப் பேசியுள்ள முனாப் படேல், “கம்பீரை பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கினால் இந்திய கிரிக்கெட் ஒரு மிகப்பெரிய பேரழிவைச் சந்திக்கும்.

அவர் மிகவும் நேர்மையான மனிதர், மனதில் பட்டதை உள்ளபடி முகத்திற்கு நேராகச் சொல்லிவிடுவார். அது பலருக்குப் பிடிப்பதில்லை. அணியின் நலனுக்காக எந்தவொரு சீனியர் வீரரையும் நீக்கும் துணிச்சல் அவருக்கு உண்டு. இதனாலேயே அவர் பல எதிரிகளைச் சம்பாதித்துள்ளார்.

அவர் இல்லையென்றால் வீரர்களைக் கையாள்வது பிசிசிஐ-க்கு பெரும் சவாலாகிவிடும்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் தோல்விகளுக்குப் பயிற்சியாளர் மட்டுமே காரணமல்ல என்பதை முனாப் படேலின் இந்த அறிக்கை அழுத்தமாக உணர்த்தியுள்ளது.