தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடிக்கும் அளவிற்கு திகழ்ந்த நடிகர் தான் சரத் பாபு. இவர் தெலுங்கில் 1973 ஆம் ஆண்டு ராம ராஜ்ஜியம் என்ற திரைப்படம் மூலம் நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கினார். அதன் பிறகு 1977 ஆம் ஆண்டு பட்டிய பிரவேசம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் சரியாக அந்த திரைப்படங்கள் இவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. அதனால் இரண்டாவது நாயகனாக நடித்து வந்தார். 71 வயதாகும் இவர் சினிமாவில் நடிப்பதை விட்டு ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 71 வயதாகும் இவர் கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஐசியூவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். கல்லீரல் செயல் இழந்ததால் மொத்த உடலிலும் விஷம் ஏறி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.