
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள எஸ்பிஐ வங்கியின் கிளை மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்ததால் வாடிக்கையாளர் அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர் ஒருவர் அங்கிருந்த கிளை மேலாளரிடம் கன்னடத்தில் பேசுமாறு கூறியுள்ளார்.
அதற்கு கிளை மேலாளர் நான் இந்தியில்தான் பேசுவேன் என்று கூறினார். இதனால் வாடிக்கையாளர் கிளை மேலாளரின் நடத்தையை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். இந்நிலையில் முதல் மந்திரி சித்தராமையா கிளை மேலாளரின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் கன்னட மொழியில் பேசுவதற்கான பயிற்சியை பெற வேண்டும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து கிளை மேலாளர் தான் பேசியதற்காக கன்னட மொழியில் மன்னிப்பு கேட்ட நிலையில் வேறு கிளைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். “இனிமேல் கன்னடத்தில் பேச முயற்சி செய்கிறேன்” என்று கூறினார். மேலும் கன்னட அபிவிருத்தி ஆணையம் வங்கிகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆறு மாதங்களுக்குள் கன்னடத்தை கற்று கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொள்ளவில்லை என்றால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது.