ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஒரு மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

தனது 15 வயது 26 நாட்களில் ஐபிஎல் தொடரில் 500 ரன்களைக் கடந்த மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி, வெறும் 227 பந்துகளில் 500 ரன்களை எட்டி, அதிவேகமாக இந்த இலக்கை அடைந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர்கள் அவரிடம், “மற்ற குழந்தைகள் கார்ட்டூன் பார்க்கும் வயதில் நீங்கள் பந்துவீச்சாளர்களைப் பந்தாடுகிறீர்களே, உங்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு மிகவும் எதார்த்தமாகப் பதிலளித்த வைபவ், “அப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார், இப்போதும் கூட மேட்ச் தொடங்குவதற்கு முன்பு நான் கார்ட்டூன் பார்ப்பேன்.

அது எனக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் களத்தில் இறங்கினால் என் கவனம் முழுவதும் கிரிக்கெட் மீது மட்டும்தான் இருக்கும்” என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். நடப்புத் தொடரில் 7 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 254 ரன்கள் குவித்து, ஆரஞ்சு தொப்பிப் பந்தயத்திலும் வைபவ் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.