
திருச்சி மாவட்டத்தில் உள்ள நாச்சிகுறிச்சி வாசன்வேலி 10ஆவது கிராஸ் தெருவில் வசித்து வரும் சாப்ட்வேர் இன்ஜினியர் லோகேஷ் (44). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவரது மகள் அவந்திகா (9) அப்பகுதியில் தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
தற்போது கோடை விடுமுறை என்பதால் கடந்த மே 23ஆம் தேதி மதிய வேளையில் அவந்திகா வெளியே விளையாட செல்வதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார். அதற்கு லோகேஷ் வெயில் கடுமையாக இருப்பதால் மாலையில் விளையாடலாம் என கூறியுள்ளார். அதனால் கோபித்துக் கொண்டு தனது அறைக்கு அவந்திகா சென்றுள்ளார்.
லோகேஷும் மகள் சாதாரணமாக கோபித்துக் கொண்டுள்ளார் என நினைத்துள்ளார். அதன் பின் சிறிது நேரம் கழித்து உணவு சாப்பிட மகளை அழைக்க அவரது அறைக்கு சென்றபோது அறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. அதனால் பதறிய லோகேஷ் பலமுறை கூப்பிடும் மகள் குரல் கொடுக்காததால் பயத்தில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அங்கு அவந்திகா தனது துப்பட்டாவால் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த காட்சியை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவசரமாக அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவந்திகா ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறு விஷயத்திற்காக 9 வயது சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.