பெங்களூருவைச் சேர்ந்த பொது அறுவை சிகிச்சை மருத்துவரான டாக்டர் மகேந்திர ரெட்டி, தனது மனைவி தோல் நோய் மருத்துவரான டாக்டர் கிருத்திகா ரெட்டி என்பவருக்கு அதிகப்படியான மயக்க மருந்தை செலுத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம், ஆறு மாதங்களுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் தடய அறிவியல் ஆய்வறிக்கையால் உறுதி செய்யப்பட்டது.

குற்றச் செயல் அரங்கேற்றிய பிறகு, மகேந்திர ரெட்டி தான் உறவில் இருந்த கள்ளக்காதலிக்கு ஒரு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செயலி மூலம் “உனக்காக என் மனைவியைக் கொன்றுவிட்டேன்” என்று குறுஞ்செய்தி அனுப்பியது, அவரின் தொலைபேசி தடயவியல் பகுப்பாய்வில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு முதலில் அழைத்துச் சென்றது கணவர்தான் என்பதால், அவரது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி இந்தச் கொலையை இயற்கை மரணம் போல காட்ட முயன்றார் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக கள்ளக்காதலியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், முக்கிய ஆதாரங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார்.