உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், சட்ட விரோதமாகப் பணம் பறிக்கும் கும்பலுடன் தொடர்புடைய வழக்கில், துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) ரிஷிகாந்த் சுக்லா (வயது 57), ரூ.100 கோடிக்கும் அதிகமாகச் சொத்து குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மெயின்புரியில் பணியமர்த்தப்பட்டுள்ள ரிஷிகாந்த் சுக்லா, 2009 வரை கான்பூரில் பணியாற்றினார். இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப் பிரதேச உள்துறை (Home Department) நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை (Vigilance Probe) விசாரணையைத் தொடங்கவும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு தனிச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) நடத்திய விசாரணையில் இந்தச் சொத்து குவிப்புக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையில், கான்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அகிலேஷ் துபேவின் பங்கு முக்கியமானது என்று தெரியவந்துள்ளது. இந்த வழக்கறிஞர், போலீஸ் அதிகாரிகள் மற்றும் கான்பூர் வளர்ச்சி அதிகாரத்தில் உள்ள அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்து ஒரு பிணையத்தை இயக்கி, போலிப் புகார்களைப் பதிவு செய்தல் மற்றும் நிலங்களை ஆக்கிரமித்தல் மூலம் பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
1998ஆம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்த சுக்லா, துபேவுடன் நட்பாகியதுடன், சில ரியல் எஸ்டேட் தொழில்களிலும் பங்குதாரராக இருந்துள்ளார். சுக்லாவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் பெயரில் உள்ள சொத்துக்கள், அவரது அறியப்பட்ட வருமானத்தை விட அதிகமாக இருப்பதாகவும், அவை “இயற்கைக்கு மாறான” மற்றும் “சட்டவிரோத” சொத்துக்கள் என்றும் SIT முடிவுக்கு வந்துள்ளது.
இந்த வழக்கில், ஏற்கனவே 11 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், மேலும் இரண்டு டி.எஸ்.பி-க்கள் மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
