திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  நண்பர்களே, தேசத்தின் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தில் தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கும்  கலாச்சார உத்வேகம் தொடர்ந்து விரிவாக வேண்டும், பரவ வேண்டும் என்பதே என்னுடைய முயற்சியாக இருக்கிறது. டெல்லியின் பாராளுமன்ற புதிய கட்டிடத்திலே புனிதமான செங்கோல் நிறுவப்பட்டிருப்பதை  நீங்கள் கண்டிருக்கலாம்.

தமிழ் பாரம்பரியமானது, தேசத்திற்கு அளித்திருக்கும் நல்லாளுகை மாதிரியில் இருந்து, கருத்தூக்கம் பெறும் முயற்சியே இது. காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற இயக்கங்களின் பொருளும் கூட இதுதான். இந்த இயக்கங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து, நாடு முழுவதிலும் தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் தொடர்பான உற்சாகம், அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இங்கே  பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள், போன்ற பல்வேறு அரச வம்சங்களின் நல்லாட்சி மாதிரிகள் கண்கூடாக காணக் கிடைக்கின்றன. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உண்டு. அவர்களிடத்தில் எனக்கு மிக நெருக்கமான உறவுகள் உண்டு. இவர்களிடமிருந்து தமிழ் கலாச்சாரம் பற்றி வெகுவாக கற்கக்கூடிய நல்வாய்ப்பும்  எனக்கு கிட்டி இருக்கின்றது. உலகின் எந்த இடத்திற்கு நான் சென்றாலும் கூட, தமிழ்நாட்டைப் பற்றி பேசாமல்…  தமிழ் மொழியை மனதார புகழாமல்  என்னால் இருக்க முடிவதில்லை என தெரிவித்தார்.