கிருஷ்ணகிரி அருகே ஓடிய பேருந்தில், அரசு பள்ளி ஆசிரியரிடம் இனிப்பு கொடுத்து மயக்கி, 8 சவரன் நகை மற்றும் பணப்பை திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த சாரதா (வயது 57) என்ற பெண், அப்பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கோவையில் வசித்து வருவதால், அடிக்கடி பேருந்தில் பயணம் செய்து சென்று வருவார்.
நேற்று, மகளை சந்தித்து விட்டு கோவையில் இருந்து சேலம் பேருந்து நிலையம் வந்த சாரதா, அங்கு இருந்து திருப்பத்தூர் செல்லும் பேருந்தில் ஏறினார். பேருந்து ஓரளவு கூட்டம் கொண்டிருந்த நிலையில், அரூர் அருகே சென்றபோது, அவரது அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண் கடலை உருண்டை கொடுத்ததாக கூறப்படுகிறது. பசியாக இருந்த சாரதா, பேருந்தில் பேசிக்கொண்டிருந்ததால் அப்பெண்ணை நம்பி அந்த இனிப்பை சாப்பிட்டார்.
அதனை சாப்பிட்ட சில நிமிடங்களில் சாரதா மயங்கி விட்டார். பேருந்தில் இருந்தவர்கள் அவர் தூங்குவதாக நினைத்து விட்டனர். ஊத்தங்கரையில் இறங்க வேண்டிய சாரதா, மயக்கநிலையில் திருப்பத்தூர் பேருந்து நிலையம் வரை சென்றுவிட்டார். அங்கு பேருந்து வந்தபோது, நடத்துநர் அனைவரையும் இறங்கச் சொல்ல, சாரதா மட்டும் அசையாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக பயணிகள் உதவியுடன் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தண்ணீர் தெளித்து அவரை விழித்தபோது, கழுத்தில் இருந்த தாலி சரடு, செயின் உள்ளிட்ட 8 சவரன் நகைகள் மற்றும் பணப்பை காணாமல் போனது தெரியவந்தது. சம்பவத்தால் மனமுடைந்த சாரதா, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து சாரதாவின் கணவர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, இனிப்பு கொடுத்து மயக்கி நகை திருடிய அந்த பெண்ணைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
