திருச்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, எனது அருமை குடும்ப சொந்தங்களே…  இன்று மத்திய அரசு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக….  மாநிலத்தின் வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது. 2014-க்கு முன்பான 10 ஆண்டுகளிலே  மத்திய அரசு அதன் தரப்பில் இருந்து மாநிலங்களுக்கு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. நம்முடைய அரசாங்கம் ஆனது கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு 120 லட்சம் கோடி ரூபாயை அளித்திருக்கிறது.

2014-க்கு முன்பான பத்து ஆண்டுகளிலே எத்தனை நிதியை மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாடு பெற்றதோ,  அதைவிட இரண்டரை மடங்கிற்கும் அதிகமான நிதியை நம்முடைய மத்திய அரசு அளித்து இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்கும் பொருட்டு மத்திய அரசு முன்பை காட்டிலும் மூன்று மடங்கு அதிக நிதியை தமிழ்நாட்டிற்கு செலவு செய்திருக்கிறது. ரயில்வே துறையை நவீனமயமாக்க நமது அரசாங்கம் முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையிலே தமிழ்நாட்டிற்கு இரண்டரை மடங்கு அதிக அளவு செலவு செய்து வருகிறது.

இன்று தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மத்திய அரசின் இலவச ரேஷன் பொருட்கள் கிடைத்து வருகின்றன. இலவசமாக மருத்துவ சிகிச்சை கிடைத்து வருகிறது, நம்முடைய அரசாங்கம் கான்கிரீட் வீடுகள், கழிப்பறை வசதிகள், குடிநீர் இணைப்புகள், எரிவாயு இணைப்புகள் போன்ற பல வசதிகளை நமது தமிழ் சொந்தங்களுக்கு செய்து வருகிறது.

என் பேரன்புடைய குடும்பத்தாரே…  வளர்ச்சி அடைந்த பாரதத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று சொன்னால் அனைவரின் முயற்சியும் அவசியமாகிறது. தமிழ்நாட்டு மக்களின்…. தமிழ் இளைஞர்களின் திறன்கள்,  திறமைகளின் மீது அபாரமான… அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கு இருக்கிறது. தமிழ் இளைஞர்கள் இடத்திலே ஒரு புதிய எண்ணம் புதிய உற்சாகத்தின் உதயத்தை என்னால் தெளிவாக காண முடிகிறது.