மேற்கு வங்காளத்தில் உள்ள சுற்றுப்புற பகுதியான ஹால்டு பகுதியில் வசித்து வந்தவர் சோம்நாத். இவரது மனைவி சுமித்ரா. இவருக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. சோம்நாத் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மார்ச் 4ஆம் தேதி அன்று சோம்நாத் மற்றும் சுமித்ரா ராய் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களது வீட்டில் கிடந்துள்ளனர். மேலும் இவர்களது குழந்தை சோம்நாத்தின் மார்பில் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மூவரின் உடல்களும் காவல்துறையினரால் மீட்கப்பட்டது.
இச்சம்பவத்தில் சோம்நாத் தனது மகனை கொன்று தனது உடலோடு சேர்த்து கட்டி தூக்கில் தொங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீட்டின் சுவர்களில் சிலரின் பெயர்கள், சொத்து தொடர்பான தகவல்கள் போன்றவை எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது. மூவரின் உடல்களையும் மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் வீட்டில் சில தடயங்களை கைப்பற்றியுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் சோம்நாத் தனது மகனின் சிகிச்சைக்காக அதிக கடன் வாங்கி இருந்தது தெரியவந்தது. இவர் ஆட்டோ யூனியனில் 8000 கடன் வாங்கி அதனை திருப்பி அடைத்துள்ளார். ஆனால் அதைத் தவிர மற்ற இடங்களில் இவருக்கு அதிகமான கடன்கள் இருந்துள்ளதால் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் அவர் வசித்து வந்த வீடு அவரது மாமாவின் வீடாகும். இதனால் சொத்து தொடர்பாக அவரது தாய் மாமாவுடன் சோம்நாத்துக்கு பிரச்சனை ஏற்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் சோம்நாத்தின் தாய் மாமா மற்றும் அத்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தற்கொலை கடிதத்தில் முகோபாத்தியாய் சஞ்சல் என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது.
இதில் சோம்நாத்திற்கு ரூபாய் 10 லட்சம் கடன் வாங்கி கொடுத்த இளைஞர் சஞ்சல் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நிலுவைத் தொகையிலிருந்த கடனை அடைக்குமாறு சஞ்சல் சோமநாத்தை பல்வேறு வழிகளில் துன்புறுத்தியதாகவும், இழிவான வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் சஞ்சலை கைது செய்துள்ளனர். இதனை அடுத்து சோம்சுப்ரா என்ற மற்றொரு நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சோம்நாத்திற்கு கடன் பெற்றுத் தர உதவியதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
