ஒடிசா மாநிலம் மன்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரசாத் நாயக். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பிரசாத் மற்றும் அவரது நண்பர்கள் கிராமத்து அருகில் இருந்த முந்திரிக்காட்டுக்கு முயல் வேட்டைக்கு கிளம்பினர். அவர்களிடம் முயலை வேட்டையாடுவதற்காக நாட்டு  துப்பாக்கிகள் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தனித்தனியாக முயலை தேடி சென்றனர்.

அப்போது இரவு நேரம் என்பதால் போதிய வெளிச்சம் இல்லாத நிலையில் முயலை தேடி வந்த பாபுலா நயல் புதரின் அருகே சென்றார். அந்த சமயம் பிரசாத் சிறு சத்தம் மற்றும் அசைவு வந்ததால் முயல் என எண்ணி துப்பாக்கியால் சுட்டார். அதன் பிறகு அதன் அருகில் சென்று பார்த்தபோது முயல் என நினைத்து தவறுதலாக தனது நண்பர் பாபுலா வை சுட்டது தெரிய வந்தது.

பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த நண்பனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் 4 பேரும் பாபுலா உடலை முந்திரி காட்டில் உள்ள ஒரு புதரில் மறைத்து வைத்துவிட்டு கிராமத்திற்கு வந்து விட்டனர். இதைத்தொடர்ந்து பாபுலாவின் மனைவி தனது கணவர் வெகு நேரம் வீட்டிற்கு வராததால் அவரைத் தேடி பிரசாத் வீட்டுக்கு சென்றார். அவரிடம் விசாரித்த போது பிரசாத் நடந்ததை கூறியதால் அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின் படி காட்டிற்கு சென்ற காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து பாபுலாவை கொலை செய்த பிரசாத் மற்றும் அவரது நண்பர்களை காவல் துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டு  துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.