உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கங்கை கரையில் எவராலும் நம்ப முடியாத ஒரு மிராக்கிள் சம்பவம் அரங்கேறியுள்ளது. விகாஸ் என்ற 21 வயது இளைஞர் சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனையடுத்து துக்கத்தில் மூழ்கிய உறவினர்கள், அவரது உடலை தகனம் செய்வதற்காக நான்கு பேர் தோளில் சுமந்து கங்கை கரைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால், இறுதிச்சடங்கின் ஒரு பகுதியாகச் சடலத்தைக் கங்கை நீரில் நனைக்க முற்பட்டபோது, திடீரென அந்த இளைஞரின் கை, கால்கள் அசையத் தொடங்கி, அவருக்கு மீண்டும் மூச்சு வந்தது.
இறந்துவிட்டதாக நினைத்த இளைஞர் திடீரென உயிர் பெற்றதைக் கண்டு அங்கிருந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.
பின்னர் சுதாரித்துக்கொண்ட உறவினர்கள், அவரை உடனடியாக மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்குச் சிகிச்சை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் மீண்டும் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
மருத்துவமனையின் அலட்சியத்தால் தான் தன் மகன் உயிரிழந்ததாகக் கூறி அவரது பெற்றோர்கள் கதறி அழுவதுடன், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மர்மமும் மிரட்சியும் கலந்த இந்தச் சம்பவம் காசி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
