சென்னை சவுகார்பேட்டையில்’ நியூ மந்திர் ஜெயின்’ கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திலீப் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் பூஜைக்காக கோவிலுக்கு அவர் சென்றபோது, கோவிலின் வெளிப்புற கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கோவிலுக்குள் சென்று பார்த்தபோது கருவறை கதவும் உடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கருவறைக்குள் சென்று பார்த்தபோது ஐந்து ஜெயின் சிலைகளில் இருந்த நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. அதாவது மொத்தம் அரை கிலோ தங்க நகைகளும், 10 கிலோ வெள்ளி நகைகளும் திருடப்பட்டுள்ளது.

இது குறித்து திலீப், கோயில் நிர்வாகியான சுரேஷ்குமார் என்பவரிடம் கூறினார். அதன்படி கோவிலுக்கு விரைந்து வந்த அவர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், நேற்று முன்தினம் கோவிலுக்குள் சுவர் ஏரி குதித்து உள்ளே வந்த மர்ம நபர்கள், நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சுரேஷ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மேலும் கோவிலில் வேலைப்பார்த்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 பேரை  சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் அழைத்துச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.