நாடு முழுவதும் சாலை விதியை மீறுவதால் வருடந்தோறும் ஆயிரக்கணக்கானோர் விபத்தில் உயிரிழக்கின்றனர். குறிப்பாக ஹெல்மெட் அணியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது அதிகமாக உள்ளதாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆகவே நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும், தொடர்ந்து அதை செய்பவர்களுக்கு சட்ட ரீதியிலான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையை அடுத்து இப்போது கோவையிலும் இருசக்கர வாகனத்தில் போகும் 2 பேரும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதனிடையே சாலை விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் அபாரதம் விதிப்பது மட்டுமல்லாமல் முறையாக விதிகளை பின்பற்றுபவர்களுக்கு பரிசுகள் வழங்கும் சம்பவமும் அரங்கேறி உள்ளது.

அதன்படி, தஞ்சையில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100% ஹெல்மெட் அணிவதை உறுதிப்படுத்தும் வகையில் அம்மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதற்கென போக்குவரத்து போலீசார் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வரும் பெண்களுக்கு விலையில்லா பெட்ரோல் 1 லிட்டர், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல பரிசு பொருட்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தஞ்சை அண்ணாசாலை வழியே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டிவந்த பெண்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த பெண்களுக்கு ரூ.1000 மதிப்பிலான வண்ண புடவைகளை பரிசாக வழங்கி அவர்களுக்கு போலீசார் சர்ப்ரைஸ் கொடுத்தனர்.