
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மருதமலை வனப் பகுதிகளில் யானைகள் இரவு நேரங்களில் உணவுக்காக ஊருக்குள் உலா வருவது தற்போது அதிகமாகி வருகிறது. இந்நிலையில் மருதமலை வ.உ.சி நகரில் நள்ளிரவு யானை ஒன்று தனது குட்டியுடன் ஒரு வீட்டின் முன்பக்க கதவை உடைத்துக் கொண்டு புகுந்துள்ளது. யானையின் பின்னாடியே வந்த குட்டி யானை வீட்டின் முன்பக்கம் வளர்க்கப்பட்ட அழகுச் செடிகளை பிடுங்கி சாப்பிட்டுள்ளது. சிறிது நேரம் அங்கேயே நின்ற யானைகள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்துள்ளது.
வீட்டின் வெளியே சத்தம் கேட்டதால் எட்டிப் பார்த்த வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சியில் அலறி அடித்துக் கொண்டு மாடிக்கு சென்றுள்ளனர். தாய் யானை வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டின் உள்ளே தும்பிக்கையை மட்டும் விட்டு உணவு ஏதும் கிடைக்குமா என பார்த்தது. உணவுப் பொருள் ஏதும் இல்லாததால் சிறிது நேரம் அங்கேயே நின்று பின்பு மருதமலை வனப்பகுதியை நோக்கி யானைகள் நகர்ந்தன.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டின் முன்பக்க சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இரவு நேரங்களில் யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க இரவு முழுவதும் வன அதிகாரிகள் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.