உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், ஒரு வாய்க்காலில் தலை துண்டிக்கப்பட்ட நிலையிலும், கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையிலும் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரவைக்கும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், 34 வயதான பேருந்து ஓட்டுநர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய நொய்டா துணை காவல் ஆணையர் யமுனா பிரசாத், செக்டார்-39 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட உடலின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க ஒன்பது போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும், 5,000-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மற்றும் சுமார் 1,100 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இறுதியில், UP16 KT 0037 என்ற பதிவு எண்ணைக் கொண்ட பேருந்தின் ஓட்டுநரான மோனு சிங் என்கிற மோனு சோலங்கி கைது செய்யப்பட்டார். கொல்லப்பட்ட பெண் பிரீத்தி யாதவ் என்பதும், இவருக்கும் ஏற்கனவே திருமணமான மோனு சிங்கிற்கும் நீண்ட காலமாக சம்பந்தத்திற்கு மீறிய உறவு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட மோனு சிங் அளித்த அதிர்ச்சி வாக்குமூலத்தின்படி, பிரீத்தி யாதவ் அவரிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். தனது வருமானத்தில் ஒரு பகுதியை பிரீத்தி எடுத்துக்கொண்டதாகவும், ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க சிங் மறுத்தபோது, பிரீத்தி இந்தத் தகாத உறவை சிங்கின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூறிவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன சிங், தொடர்ந்து பணம் கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் பணம் கொடுக்க முடியாமல் போனதால், பிரீத்தி தொடர்ந்து மிரட்டவே, நவம்பர் 5-ஆம் தேதி பிரீத்தியை கொலை செய்ய மோனு சிங் முடிவு செய்தார். அவர் பிரீத்தியை தனது பேருந்தில் அழைத்துச் சென்று, சாலையோர உணவகத்தில் நடந்த வாக்குவாதத்தின்போது, ஆத்திரத்தில் கூர்மையான ஆயுதத்தால் பிரீத்தியைத் தாக்கி, அவரது தலையைத் துண்டித்துள்ளார்.
மேலும், உடல் அடையாளம் காணப்படுவதைத் தடுப்பதற்காக இரண்டு கைகளையும் துண்டித்து செக்டார் 108-ல் உள்ள வடிகாலில் உடலை வீசியுள்ளார். துண்டிக்கப்பட்ட தலை மற்றும் கைகளை காசியாபாத்திற்கு எடுத்துச் சென்று, பேருந்தின் அடியில் வைத்து நசுக்கி அப்புறப்படுத்தியதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
