ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக கட்சியின் வேட்பாளர் கே.எஸ் தென்னரசு தோல்வி அடைந்தது குறித்து தற்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. இதே வருடம் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்விகள் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த சமயத்தில். இதே எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியை சந்தித்தோம். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிட கூட முன்வரவில்லை. நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. இவைகளே பழனிச்சாமி வெத்து வேட்டு என்பதற்கு சாட்சி. இதற்கு மேலும் பொறுத்திருந்தால் அண்ணா திமுகவின் அஸ்தி கூட அடுத்த தலைமுறைக்கு கிடைக்காது. எனவே அனைவரும் சேர்ந்து ஓர் குரலாக ஒலிப்போம். மேலும் கெட் அவுட் இபிஎஸ் அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.