மதுரை மாவட்டத்தில் உள்ள ஜெய்ஹிந்த் புரம் பகுதியில் தங்கராஜூ பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தங்கராஜூ பாண்டியன் திருவிளையாடல் ஓவியங்களை தபால் அட்டையில் வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து ஆசிரியர் கூறியதாவது, சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் இருந்தது. தற்போது இன்லாண்டு லெட்டர், தபால் அட்டைகளின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. இதுகுறித்து வருங்கால சந்ததியினருக்கும், மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் திருவிளையாடல் புராண கதைகளை படித்தேன்.

பின்னர் 64 திருவிளையாடல்களையும் 64 தபால் அட்டைகளில் வண்ண ஓவியங்களாக வரைந்து விளக்கத்தைப் பின்புறம் எழுதி இருக்கிறேன். தொடர்ந்து இதுபோல தபால் அட்டையில் படங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆர்வமாக இருக்கிறேன். மக்கள் அனைவரும் தபால் அட்டையை பயன்படுத்த வேண்டும் என்பதை என்னுடைய எண்ணம் எனக் கூறினார்.