பெங்களூருவில் வசிக்கும் அமெரிக்க வம்சாவளி பெண்ணான @danamarieplus3, இந்தியாவின் முதியோர் பராமரிப்பு கலாசாரத்தை பாராட்டி, அமெரிக்காவுடன் ஒப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவில் முதியவர்கள் மருத்துவமனையில் இருக்கும்போது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் அவர்களுடன் இருப்பதை கண்டு வியந்த அவர், அமெரிக்காவில் முதியவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருப்பதாக குறிப்பிட்டார்.
இன்ஸ்டாகிராமில் 26,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட இவர், இந்திய வாழ்க்கை குறித்த பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அவரது சமீபத்திய வீடியோவில், அமெரிக்காவில் முதியோர் இல்லங்களில் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து, அங்கு முதியவர்களுக்கு மாதக்கணக்கில் குடும்பத்தினர் யாரும் வருவதில்லை என வேதனை தெரிவித்தார்.
இந்தியாவில் மருத்துவமனைகளில் முதியவர்களுடன் அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருப்பதையும், அவர்களுக்கு ஆதரவாக கைகோர்த்து, உரையாடி, மருத்துவர் சந்திப்பிற்காக காத்திருப்பதையும் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார்.
ஒரு முதியவருக்கு 5-6 குடும்ப உறுப்பினர்கள் உடன் வருவதை கவனித்ததாகவும், இந்திய கலாசாரம் குடும்ப பந்தத்தையும், முதியவர்களை பராமரிக்கும் இளைஞர்களின் ஒழுக்க மதிப்புகளையும் வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். ஒருவர், “இந்தியாவில் முதியவர் தனியாக இருந்தாலும், அக்கம்பக்கத்தினர் உதவுவர்,” என்றார். மற்றொருவர், “நாங்கள் எங்கள் தாத்தா-பாட்டியை பெற்றோரை விட அதிகம் நேசிக்கிறோம்,” என உருக்கமாக பதிவிட்டார்.
