திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கத்தில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சில தனியார் நிறுவனங்களுக்கு தொழிலாளர் சட்ட ஆலோசகராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் இருக்கும் பிரபல தொழில் நிறுவனத்திற்கும் மனோகரன் ஆலோசகராக இருக்கிறார். கடந்த மாதம் 15-ஆம் தேதி தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு சில ஆவணங்களை முறையாக பராமரிக்கவில்லை என எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

அதற்கு மனோகரன் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது என கூறி நகல்களை தொழிலாளர் உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். அப்போது கார்த்திக் திருச்சியில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் எங்களை முறையாக கவனித்து விடுகிறார்கள். ஆனால் உங்கள் நிறுவனத்தில் மட்டும் எங்களை கவனிக்காமல் இருக்கிறீர்கள். நாங்கள் நினைத்தால் எப்படி வேண்டுமானாலும் அபராதம் விதிக்கலாம் என கூறி 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து மனோகரன் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டனிடம் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி மனோகரன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கார்த்திக்கை கையும், களவுமாக பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.