மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்னா மாவட்டத்தில் உள்ள அமர்பட்டான் அரசு மருத்துவமனையில் கடந்த ஜூலை 15  ஆம் தேதி இரவு 2 மணி அளவில் பிரசவ வலியுடன் துர்கா திவேதி(24) என்ற பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவமனை மருத்துவர்கள் டாப்ளர் மற்றும் சோனோகிராபியை பயன்படுத்தி குழந்தையின் இதயத்துடிப்பை சோதனை செய்தனர். அப்போது குழந்தையின் இதயத்துடிப்பை தவறுதலாக கண்டறிந்ததால் குழந்தை இறந்து விட்டதாகவும் உடனே கருக்கலைப்பு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் துர்கா அவரது கணவர் ராகுல் திவேதி இருவரும் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன் மீண்டும் ஒரு முறை தனிப்பட்ட முறையில் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று உறுதி செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி இருவரும் பர்ஹத் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றதாகவும், அங்கு புதிய சொனோகிராபி செய்ததாகவும் அப்போது குழந்தை உயிருடன் மற்றும் ஆரோக்கியமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என கூறியுள்ளனர்.

பின்னர் உடனடியாக அந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துர்காவிற்கு சிசேரியன் மூலம் 3.5 கிலோ எடை உடைய ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்த விவகாரம் சமூக ஊடகங்கள் வழியாக வெளியானதாகவும், அதனால் அந்த மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் சிவில் சர்ஜனுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் CHMHO டாக்டர் எல்.கே. திவாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறான தகவல்கள் கண்டுபிடிக்கபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் 3 மருத்துவர்களின் பெயர்கள் வெளிவந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் துர்காவிற்கு சோனோகிராபி நடத்திய மூத்த மருத்துவர்கள் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது என கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.