நாடு முழுவதும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உணவகங்கள் மற்றும் விடுதிகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளது. வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு விநியோகத்திலும் பெரும் காலதாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் சிக்கனமான முறையில் எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயுவைச் சேமிக்க பிரஷர் குக்கர்களைப் பயன்படுத்துவது மிகச்சிறந்த வழியாகும். இது சமையல் நேரத்தை 70 சதவீதம் வரை குறைப்பதுடன் பருப்பு மற்றும் இறைச்சி போன்றவற்றை விரைவாக வேகவைக்க உதவுகிறது. மேலும் அரிசி மற்றும் தானியங்களைச் சமைப்பதற்கு முன்பே நன்றாக ஊறவைப்பதன் மூலம் 30 முதல் 50 சதவீதம் வரை எரிபொருளை மிச்சப்படுத்த முடியும்.

சமையல் பாத்திரங்களின் அளவிற்கு ஏற்ப சரியான அடுப்பு பர்னர்களைத் தேர்வு செய்வது அவசியமாகும். சிறிய பாத்திரங்களைப் பெரிய பர்னர்களில் வைப்பதைத் தவிர்ப்பதன் மூலமும் தீப்பிழம்பு பாத்திரத்திற்கு வெளியே வராதவாறு கட்டுப்படுத்துவதன் மூலமும் எரிவாயு வீணாவதைத் தடுக்கலாம்.

சமைக்கும் போது பாத்திரங்களை எப்போதும் மூடி வைத்து வேகவைக்க வேண்டும். இதன் மூலம் வெப்பம் வெளியேறாமல் தடுக்கப்பட்டு முப்பது சதவீத எரிபொருள் சேமிக்கப்படுகிறது. காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கிச் சமைப்பதும் அவை விரைவாக வேகுவதற்கு வழிவகுக்கும். ஒரே குக்கரில் வெவ்வேறு பாத்திரங்களைப் பயன்படுத்தி பருப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்த்து வேகவைப்பது கூடுதல் சிக்கனத்திற்கு வழிவகுக்கும்.

அடுப்பு பர்னர்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க அவற்றை வாரம் ஒருமுறை தூய்மைப்படுத்துவது அவசியமாகும். அடைப்புகள் இருந்தால் எரிவாயு தேவையற்ற முறையில் விரயமாகும். உணவுகள் முழுமையாக வேகுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பே அடுப்பை அணைத்துவிட்டு அந்த வெப்பத்திலேயே உணவை வேகவிடலாம்.

பாத்திரங்களின் அடித்தளம் கனமானதாக இருந்தால் வெப்பம் சமமாகப் பரவி உணவு விரைவாக வேகும். குறிப்பாகத் தடித்த அடித்தளம் கொண்ட துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்களைப் பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேநீர் மற்றும் பாஸ்தா போன்றவற்றைத் தயாரிக்க மின்னணு கெட்டில்களைப் பயன்படுத்துவது எரிவாயு பயன்பாட்டைக் குறைக்க உதவும்.

தற்போது நிலவி வரும் எரிவாயு தட்டுப்பாட்டைச் சமாளிக்கப் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகிறது. ஸ்மார்ட்டான முறையில் திட்டமிட்டுச் சமைப்பதன் மூலம் தேவையற்ற அலைச்சலையும் பண விரயத்தையும் தவிர்க்க முடியும்.

எரிபொருள் சிக்கனம் என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கும் வீட்டுச் செலவுகளைச் சமாளிப்பதற்கும் ஒருசேர உதவும் என்பதால் இந்த ஆலோசனைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.