கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கார்பதி வனப்பகுதி வழியாக பிஏபி கால்வாய் பணிக்கு நேற்று காலை தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் படுகாயங்களுடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், அவர் பழைய சர்க்கார் பதியச் சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி என்பது தெரியவந்தது. இவர் வனப்பகுதி வழியாக சர்க்கார்பதியில் இருந்து பழைய சர்க்கார்பதிக்கு நடந்து சென்ற போது காட்டு யானை தாக்கியதால் படுகாயம் அடைந்தார்.

அதன் பிறகு எழுந்து நடக்க முடியாமல் விடிய விடிய வனப்பகுதியில் சுப்ரமணி தவித்துக் கொண்டிருந்தார். தற்போது மேல் சிகிச்சைக்காக சுப்பிரமணி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரண தொகையாக 25 ஆயிரம் ரூபாய் பணத்தை வனத்துறையினர் வழங்கியுள்ளனர்.