தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஒகேனக்கல் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் கோடுபட்டி சின்னாறு வனப்பகுதியில் 10- க்கு மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டிருந்தது. அந்த யானைகள் தண்ணீர் தேடி சின்னாற்றுக்கு வந்துள்ளது. அப்போது 8 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்த போது சேற்றில் சிக்கி வெளியேற முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தது.

2 நாட்கள் கழித்து யானை சின்னாற்றில் மிதந்து வந்ததை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஓகேனக்கல் வனச்சரக அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் யானையின் உடலை மீட்டனர். பின்னர் கால்நடை டாக்டர் பிரகாஷ் தலைமையிலான குழுவினர் யானைக்கு பிரேத பரிசோதனை செய்து பொக்லைன் எந்திரம் மூலம் வனப்பகுதியில் குழி தோண்டி உடலை புதைத்தனர்.